உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாண்டவர் கோவில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க தீவிரம்!

கூத்தாண்டவர் கோவில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க தீவிரம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சுற்றுலா தலமாக அறிவித்து ரூ.58 லட்சம் மதிப்பில்  பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சிறப்பு மிக்க கூத்தாண்டவருக்கு உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் கட்டப்பட்டது. மிகவும் பிரசித்த பெற்ற கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூவாகத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலில் 800 ஆண்டுகள் சிறிய இடத்திலும், பின்னர் 400 ஆண்டுகள் மற்றொரு இடத்திலும்  இருந்தது. தற்போது 3வது இடத்தில் 144 ஆண்டுகளாக இருந்து வருகிறது.  இக்கோவிலில் திருநங்கைள் தாலி கட்டுதலும், தாலி அறுத்தல் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் மே மாதங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கும்பாபிஷேகம்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2000ம் ஆண்டில் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு 2014ல்  புதுப்பித்து வரும் 27ம் தேதி கும்பாபிகேஷகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சுற்றுலாதலம்: இதனிடையே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சுற்றுலா தலமாக அறிவிக்கவேண்டும் என சட்ட சபையில்  2012-13ல் குமரகுரு எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று முதல்வர் ஜெ., சுற்றுலா தலமாக அறிவித்து,  வசதிகளை ஏற்படுத்த ரூ. 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.திருநங்கைகள் தங்குவதற்காக 10 அறைகள், குளத்தின் அருகே பொது கழிவறை, திருநங்கைகளுக்கான கழிவறை கட்டடத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. குடிநீர் மேல்தேக்க தொட்டி கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. பரிக்கல்-கூவாகம்-பெரியசெவலை இடையேயான தார் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 5 லட்சத்தில் தேர் சக்கரம் செய்யும் பணி நடக்கிறது. அவற்றில் திருநங்கைகள் தங்குவதற்கான விடுதி வசதி, கழிவறை கட்டட பணிகள், தார் சாலை பணிகள் நடந்து வருகின்றன. வரும் 27ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக  பணிகள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவில் கோபுர கலசத்தில் குமரகுரு எம்.எல்.ஏ., தனது சொந்த நிதி மற்றும் கிராம மக்களின் நிதியுதவியுடன்  தங்க மூலாம் பூசுவதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !