கொல்லங்கோடு கோயிலில் குழந்தைகளுக்கு தூக்கத்திருவிழா!
 நாகர்கோவில் : கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற தூக்கத் திருவிழாவில் 1498 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா. குழந்தை வரம் வேண்டி குழந்தை பிறந்தவர்கள் தங்கள் குழந்தைகளை மூன்று வயதுக்கு முன்னதாக தூக்க மரத்த்தில் ஏற்றுகின்றனர். தூக்கக்காரர்கள் என அழைக்கப்படும் பக்தர்கள் குழந்தைகளை கையில் தாங்கிய படி40அடி உயர தூக்கமரத்தில் தொங்கிய படி கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி தூக்க நேர்ச்சையாகும். இவ்வாறு குழந்தைகளை தாங்கிய படி தொங்கும் தூக்கக்காரர்களை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பின்னரே தேர்வு செய்கின்றனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆறு நாட்கள் கோயிலில் தங்கி கோயிலில் கொடுக்கும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இவர்கள் ஆறு நாட்களும் கடலில் குளித்து ஈரத்துணியுடன் வந்து கோயிலை சுற்றி தரையில் குப்புறப்படுத்து தேவியை வணங்குகின்றனர். இது நமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தூக்கத்திருவிழா நேற்று நடைபெற்றது. தேர் அமைப்பு கொண்ட தூக்க வண்டியில் நான்கு தூக்க வில்கள் அமைந்துள்ளது. இந்த நான்கு வில்லிலும் நான்கு தூக்கக்காரர்கள் துணியால் கட்டப்படுகின்றனர். இவர்கள் கைகளில் குழந்தைகள் கொடுக்கப்பட்டதும் தூக்கமரம் வானை நோக்கி எழும்பும். தொடர்ந்து தூக்கதேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு கோயிலை வலம் வருகிறது. இதில் 1498 குழந்தைகள் கலந்து கொண்டனர். 374 முறை இந்த தேர் கோயிலை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவி தரிசனம் நடத்தினர்.