விநாயகர் கோயில் தெப்பத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பு!
பண்ணைக்காடு : பண்ணைக்காடு ஊரல்பட்டி விநாயகர் கோயில் தெப்பத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டு பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் குடிநீரை தவிர்த்து அன்றாட இதர பயன்பாட்டிற்கு ஊரல்பட்டி விநாயகர் கோயில் தெப்பத்தை பொதுமக்கள் சுத்தம் செய்து பயன்படுத்த முன்வந்தனர். சுத்தம் செய்த நிலையில் அருகாமையில் செல்லும் சாக்கடை நீர் தெப்பத்தில் கலப்பது தெரியவந்தது. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிலை குறித்து புகார் தெரிவித்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கோயில் குளத்தில் தீர்த்தம் எடுத்தல் வறட்சியில் பொதுமக்கள் பயன்படுத்துவது என்ற பயன்பாட்டிலுள்ள தெப்பம் சாக்கடை நீர் கலப்பதால் மக்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். கோயில் தெப்பக்குள நிர்வாகக்குழு தலைவர் தனசேகரன் கூறியதாவது: 1901 ம் ஆண்டு கட்டபட்ட பழமையான தெப்பம் இது. சாக்கடை கழிவு நீர் தெப்பத்தில் கலப்பது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வறட்சி நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தெப்பத்தில் கலக்கும் சாக்கடை நீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.