ஜீயபுரம் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளல்
ஜீயபுரம் : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நம்பெருமாள் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து புறப்பாடாகி வெள்ளி பல்லக்கில் மேலூர் வந்தடைந்தார். அங்கிருந்து காவிரி ஆற்றின் வழியாக ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நள்ளிரவில் எழுந்தருளினார்.நேற்று அதிகாலையில் நம்பெருமாளுக்கு தயிர் சாதமும், கீரையும் அமுது படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து நம்பெருமாள் பல்லக்கில் ஜீயபுரம், அந்தநல்லூர், அம்மன்குடி போன்ற பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின்னர் நேற்று மீண்டும் ஆஸ்தான மண்டபத்தில் காசுமாலை, அடுக்கு பதக்கம், முத்து வளைய கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்ததார். திரளான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.