சீர்காழி வைத்தீஸ்வரன்கோவிலில் பிரம்மோற்சவ விழா
சீர்காழி : நாகை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகிஅம்பாள், செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்) ஆகிய சாமிகள் அருள்பாலித்து வருகின்றனர். இக் கோயிலில் இந்த ஆண்டு பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெற்றது.மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் ஞாயிறன்று தேர்திருவிழாவும், 18-ம் இரவு தெப்ப திருவிழாவும், அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது. 20-தேதி உதிரவாய் துடைப்பு உற்சவமும், 27-ம் தேதி மஞ்சள்நீர் உற்சவமும், மே மாதம் 4-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.