ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் தேரோட்டத்திற்கு குடிநீர் திட்டத்தால் சிக்கல்!
ஸ்ரீபெரும்புதூர் : ஆதிகேசவப் பெருமாள் கோவில், தேர் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக, பயன்படுத்தாமல் மூடிக்கிடந்த தேரை, இவ்வாண்டு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலைகள் சேதம்: ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், மணவாள மாமுனிகள் கோவில் ஆகிய சன்னிதிகள், ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தின் 7வது நாள், ஆதிகேசவப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வருவார். இதற்காக இருந்த பழமையான தேர் பழுதடைந்ததால், கடந்த, ௨௦௦௪ம் ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டு, அன்று முதல் ஆண்டுதோறும் புதிய தேரில் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த ௨௦௧௩ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நகர்ப்புற மேம்பாட்டு உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில், குடிநீர் திட்டம் அமைக்கும் பணி ௪௦.௭௧ கோடி செலவில், நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக, பேரூராட்சி முழுவதும், முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
மாற்று ஏற்பாடு: ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருத்தேர் நிறுத்தப்பட்டுள்ள தேரடி வீதி மற்றும் தேர் சுற்றி வரும் காந்தி சாலையிலும், குடிநீர் குழாய் புதைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், நிலையிலிருந்து தேரை இழுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதன்படி, வரும் 15ம் தேதி, கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவ விழா துவங்க உள்ளது. இதனால், மணவாள மாமுனிகள் கோவிலுக்கு சொந்தமான, சிறிய தேரில், ஆதிகேசவப்பெருமாள், திருவீதி உலா வைபவமும் நடத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, பயன்பாடில்லாமல், மூடிக்கிடந்த தேரை, பிரம்மோற்சவத்திற்கு பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை ஸ்தபதி ஆய்வு செய்ய உள்ளார். அதன்பின், பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கிய பின், தேர் பயன்பாட்டிற்கு வரும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.