உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி மலைக்கோட்டையில் திருப்படி பூஜை விழா

திருச்சி மலைக்கோட்டையில் திருப்படி பூஜை விழா

திருச்சி: மலைக்கோட்டையில் திருப்படி பூஜை திருவிழா நேற்று நடந்தது. திருச்சி, மலைக்கோட்டை தாயுமானஸ்வாமி கோவிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் நடக்கும். 63ம் ஆண்டாக அடியார்கள் பாதம்படும் திருப்படிகளுக்கு திருப்படி பூஜை செய்யப்பட்டது. எப்போதும் இறைவைனை நினைத்து பக்தியால் உருகிக்கொண்டிருக்கும் அடியார்களின் மேன்மையை, உயர்வை, சிறப்பை அஞ்ஞான இருளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணர்த்தவே இப்படிபூஜை நடத்தப்படுகிறது. திருப்படி பூஜை நேற்று காலை, 7 மணிக்கு பக்தர்கள் புடைசூழ ஓதுவார் மூர்த்திகள் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியிலிருந்து புறப்பட்டு, திருப்புகழ் மற்றும் துதிப்பாடல்களை பாடியவாறு மலைக்கோட்டையை சுற்றி கிரிவலமாக வந்தனர். காலை, 9 மணிக்கு தாயுமானஸ்வாமி கோவிலில் உள்ள ஒவ்வொரு திருப்படிக்கும் சந்தனம், குங்குமம் இட்டு, பூசாற்றி, வெற்றிலை-பாக்கு, பழம் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது ஓதுவார் மூர்த்திகள் திருப்புகழ் மற்றும் நாமாவளிகளை பாடிக்கொண்டு வந்தனர். காலை, 11 மணிக்கு உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், மட்டுவார் குழலம்மை மற்றும் தாயுமான ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. படிப்பூஜையின் போது, திரளான சிவனடியார்களும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புகழ் திருப்படி திருவிழா கமிட்டி போஷகர் ரவீந்திரன், தலைவர் குமரவேல், செயலாளர் சங்கரன், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !