திருச்செந்தூர் முருகன்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
தூத்துக்குடி : திருசெந்தூர் முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ஒரு மணிநேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதணை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு ஆறுமுகநயினாருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பின் பகல் 12மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு கலையரங்கில் நாதஸ்வர மங்கள இசை நிகழச்சியும், காலை 10 மணிக்கு கோயில் நாட்குறிப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை நிகழச்சியும் நடந்தது. தமிழ்புத்தாண்டு முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு திரு விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை இணை கமிஷனர் பொறுப்பு ஞானசேகரனும், தக்கார் கோட்டைமணிகண்டனும் செய்திருந்தனர்.