வெயிலில் காயும் வினோத சித்தர்?
கொரட்டூர்: அழுக்கேறிய கிழிந்த உடையுடன், சுட்டெரிக்கும் வெயிலில், நெடுஞ்சாலை நடைபாதையில் அமர்ந்திருந்தவரை, வினோத சித்தர் என, வேடிக்கை பார்க்க குவிந்தவர்களால், பரபரப்பு ஏற்பட்டது. கொரட்டூர் அடுத்த தாதங்குப்பம், 200 அடி சாலையின் நடைபாதையில், அழுக்கேறிய உடையுடன், நன்கு வளர்ந்த சடை முடியுடன், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த சில தினங்களாக அமர்ந்து இருக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கும் அவரை, பகுதிவாசிகள் பலரும், ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் அவருக்கு பழம், மோர் போன்ற குளிர்பானங்களை வாங்கி கொடுக்கின்றனர். ஒரு சில நேரம் வேடிக்கை பார்ப்பவர்களின் கூட்டம் அதிகரித்து, அந்த பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேடிக்கை பார்ப்பவர்கள் மனிதாபிமானத்துடன் கொடுக்கும் பழங்கள், குளிர்பானங்கள் எதையும் அவர் உட்கொள்ளவில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் சுகமாக உட்கார்ந்திருக்கும் இந்த சித்தர், இமயமலையில் இருந்து வந்திருக்கிறார் என, அவரை வேடிக்கை பார்ப்பவர்கள், தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மற்றவர்களிடம் கதை விடுகின்றனர். அவர், இந்தி மற்றும் தெலுங்கு மொழி பேசுவதாக, பகுதிவாசிகள் கூறுகின்றனர். அவரை வேடிக்கை பார்க்க கூடும் கூட்டத்தால், அவ்வப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.