மீனாட்சி அம்மன் திருக்கல்யாண டிக்கெட் முன்பதிவு துவக்கம்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,30 முதல் மே 12 வரை நடக்கிறது. மே10ல் நடக்கும் திருக்கல்யாண விழாவிற்கான டிக்கெட் முன்பதிவுதுவங்கியது. கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் கூறியுள்ளதாவது: கோயில் வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் மே10 காலை 10.34 மணிக்கு மேல் 10.58 மணிக்குள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக 500 ரூபாய், 200 ரூபாய் டிக்கெட் பெற முன்பதிவு துவங்கியுள்ளது. பக்தர்கள் வசதிக்காக கோயில் இணையதளத்தில் (www.maduraimeenakshi.org) ஏப்.,30 வரை முன்பதிவு செய்யலாம். கோயிலின் பிரதான டிக்கெட் விற்பனை நிலையத்தில், நடைதிறந்திருக்கும் போது முன் பதிவு செய்யலாம். திருக்கல்யாண தரிசன கட்டண சீட்டு பெற விரும்பும் பக்தர்கள், தங்களின் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றின் நகல் இணைத்து, முகவரி, போன் எண்ணுடன், கோயிலின் உள்துறை பிரதான டிக்கெட் விற்பனை நிலையத்தில் பதிவு செய்யலாம். "இணை கமிஷனர், மீனாட்சி கோயில், மதுரை என்ற முகவரிக்கு இணைப்பில் கண்டு உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மாதிரி படிவம் அல்லது மாதிரி படிவத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள விபரத்தை மனுவாக, முழுமையாக பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இன்று (ஏப்.,26) முதல் மே 3க்குள் விண்ணப்பிக்கலாம். பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பித்துள்ள பக்தர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் உறுதி செய்யப்படும். இத்தகவல் மே 1க்கு மேல் அனுப்பப்படும். "ஆன்லைன் மூலம் தொகை செலுத்தி வரப்பெறும் சீட்டை மே 5 முதல் கோயில் அலுவலகத்தில் கொடுத்து, உரிய கட்டணச் சீட்டை பெற்று கொள்ளலாம் அல்லது கோயில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, சீட்டை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.