பிரத்யங்கரா தேவி கோவிலுக்கு தீவைப்பு!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, ஆத்ம சைதன்ய பீட ஆசிரமத்திற்கும், பிரத்யங்கரா தேவி கோவிலுக்கும், மர்ம நபர்கள் தீ வைத்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்ம சைதன்ய பீடம் ஆசிரமத்தில், பிரத்யங்கரா தேவி கோவில் உள்ளது. இந்த ஆசிரமத்தில், இந்து மறுமலர்ச்சி இயக்க அலுவலகம் உள்ளது. ஆசிரமத்தை, திருவண்ணாமலை சித்தர் மகாராஜ் சுவாமி என்பவர், நிர்வகித்து வருகிறார். நடந்த லோக்சபா தேர்தலில், மகாராஜ் சுவாமி, அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.தேர்தலன்று, இவர் சென்னை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், ஆசிரம தோட்டத்தின் வழியாக புகுந்த மர்ம நபர்கள், ஆசிரமத்திற்கும், பிரத்யங்கரா தேவி கோவிலுக்கும் தீ வைத்தனர். இதில், ஒரு கார் உட்பட, ஆசிரமம் மற்றும் கோவிலில் இருந்த பொருட்கள் தீயில் கருகின. தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து, திருச்செந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.