உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் மே 9ல் சித்திரைத் திருவிழா துவக்கம்!

பரமக்குடியில் மே 9ல் சித்திரைத் திருவிழா துவக்கம்!

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 9 ல் துவங்குகிறது. அன்று காலை 8.30 முதல் 10.15 மணிக்குள், மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள் உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களுக்கும் காப்பு கட்டப்படும். பின்னர் கும்பங்கள் புறப்பாடாகி, யாகசாலையில் சேர்க்கையாகிறது. மே 12 வரை காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடந்து, தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. மே 13 காலை 10.31 முதல் 12.00 மணிக்குள் கும்பங்கள் புறப்பாடாகி, பெருமாள், கருப்பண்ணசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. அன்று இரவு 2 மணிக்கு மேல், சுந்தரராஜப் பெருமாள் ஈட்டி, கத்தி, வளரி, வேல், கம்புடன், கோடாரி கொண்டையிட்டு, "கள்ளழகர் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான தீவெட்டிகள் வெளிச்சத்தில், புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகி, கருப்பண்ணசாமியிடம் விடைபெற்று, வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மே 14 ல் காலை 9 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க, பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன், குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். மதியம் 2 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்திலும், நாள் முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக, இரவு 9 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைகிறார். மறுநாள் மாலை சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனமும், இரவு முழுவதும் விடிய, விடிய தசாவதாரத்தில் காட்சியளிக்கிறார். மே 16 கருடவாகனம், மே 17 ல் ராஜாங்க திருக்கோலம், மே 18 ல் காலை 7 மணிக்கு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன், புஷ்பபல்லக்கில் எழுந்தருகிறார். நாள் முழுவதும் வீதியுலா வந்து மாலை 5 மணிக்கு கோயிலுக்குள் செல்கிறார். அன்றிரவு கண்ணாடி சேவை நடக்கிறது. மறுநாள் உற்சவசாந்தியும், மே 20 ல் பால்குடத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !