கதையும் பாடமும்!
இந்தக் கதையில் வரும் அக்கினி, வாயு முதலான தேவர்கள் புலன்களுக்கும், தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் தலைமைப் புலனான மனத்திற்கும் உருவகமாகக் கூறப்பட்டுள்ளனர்.
அக்கினி எதையும் எரிக்க வல்லவன். வாயு எதையும் சுமக்க வல்லவன். இவ்வாறே தேவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆற்றல் பெற்றவர்கள். ஆனால் இந்த ஆற்றல்கள் எதுவும் யட்சனின் முன்னால் செயல்படவில்லை. அவர்கள் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இறைவன் தந்த வெற்றியைத் தங்கள் திறமையால் வந்த வெற்றியாக எண்ணியதன் விளைவு இது. அவர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பிய இறைவன் தமது ஆற்றலை அவர்களிடமிருந்து விலக்கிக்கொண்டார். எனவே தேவர்களால் எதையும் செய்ய இயலவில்லை அக்கினியால் எரிக்க முடியவில்லை, வாயுவால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியவில்லை.
தேவர்கள் புலன்களுக்கு உருவகமாகக் கூறப்பட்டுள்ளனர். கண்கள் காண்கின்றன, காதுகள் கேட்கின்றன, கால்கள் நடக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு புலனும் தங்களுக்கென்று ஓர் ஆற்றலைப் பெற்றுள்ளன. ஆனால் கண்கள் காண்பதற்கு காதுகள் கேட்பதற்கும் உரிய ஆற்றல் ஆன்மாவிலிருந்து வருகிறது. ஆன்மா தனது உணர்வைப் புலன்களிலிருந்து விலக்கிக்கொண்டால் கண்கள் காணவோ, காதுகள் கேட்கவோ இயலாது.
மரணம் இதற்கு ஓர் உதாரணம் ஆகும். மரணத்தில் பிராணன் புலன்களிலிருந்து பிரிக்கப்படுகிறது. அதன்பிறகு கண்கள் காண்பதில்லை, காதுகள் கேட்பதில்லை. பிராணன் மட்டுமல்ல, நமது உடம்பு, மனம் என்று அனைத்தின் இயக்கங்களும் ஆன்மாவின் காரணமாகவே நிகழ்கின்றன. ஆன்ம உணர்வு ஆதாரமாக இல்லையென்றால் புலன்களோ மனமோ எதுவும் இயங்காது. நமக்குப் பின்னால் நமது உடல்- மனச்சேர்க்கைக்குப் பின்னால் இருப்பது ஆன்மா; எல்லா இயக்கங்களும் நடைபெறுவது ஆன்மாவால்- கதை தரும் முதல் பாடம் இது.
தேவர்கள் ஒவ்வொருவரும் சென்று, யட்சன் யார் என்று அறிய முடியாமல் திரும்புகிறார்கள். புலன்களும் அது போலவே. புலன்களால் இறைவனை அடைய முடியாது.
கடைசியாக, தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செல்கிறான். அவன் சென்றபோது அந்த யட்சன் மறைந்து விட்டான். அந்த இடத்தில் தேவி நின்றாள். தேவியிடம் கேட்டு உண்மையை உணர்வதாக அடுத்த அத்தியாயத்தின் முதல் மந்திரம் தெரிவிக்கிறது. அனைத்து புலன்களுக்கும் தலைமையாக இருப்பது மனம்.
மனத்தால்தான் இறைவனை தேடவேண்டும். ஆனால் மனத்தால் இறைவனை அறிய முடியாது என்பதை அனைத்து உபநிஷதங்களும் ஒரே குரலில் கூறுகின்றன; அதையே இந்த உபநிஷத்திலும் காண்கிறோம். யட்சன் மறைந்ததாக அதையே இந்தக் கதை குறிப்பிடுகிறது.
யட்சன் யார் என்று அறிய முடியாமல் தோற்று நின்ற இந்திரன் தேவியிடம் பிரார்த்தனை செய்தபோது, யட்சனைப் பற்றிய உண்மையை அவள் தெரிவித்தாள்.
மனத்தால் இறைவனை, அவரது உண்மை நிலையில், அறிய முடிவதில்லை. அதே மனம் தனது ஆற்றலின்மையை உணர்ந்து, தெய்வத்திடம் தன்னைச் சமர்ப்பித்து, பிரார்த்தனை செய்தால் அந்தத் தெய்வத்தின் மூலமே அறுதி உண்மையை அறியவல்லதாகிறது. இதையே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், பக்த வத்சலனான பகவான் மனம் வைத்தால் பிரம்ம ஞானத்தையும் கொடுப்பான் என்கிறார்.
நமது உடலும் மனமும் எல்லாம் இயங்குவது யாரால் என்ற கேள்வியுடன் உபநிஷதம் ஆரம்பித்தது. ஆன்மாவே என்று அடுத்த மந்திரம் அதற்குப் பதில் அளித்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு செயல்பாட்டிலும் அதனை உணர்பவனே உண்மையில் ஆன்ம அனுபூதி பெற்றவன் என்பதை 2:4ல் கண்டோம். தெய்வத்திடம் பக்தி கொண்டு, அவரிடம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் அந்த ஆன்ம அனுபூதியைப் பெறலாம் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
அடிப்படை சாதனைகள்!
தேவியிடம் பிரார்த்தனை செய்து இந்திரன் உண்மையை அறிந்தான். அதாவது, ஆன்ம அனுபூதிக்குப் பிரார்த்தனை வேண்டும். அவை பற்றிய இந்த அத்தியாயம் கூறுகிறது.
தேவி உணர்த்திய உண்மை:
ஸா ப்ரஹ்மேதி ஹோவாச; ப்ரஹ்மணோ வா ஏதத் விஜயே மஹீயத்வமிதி; ததோ ஹைவ விதாஞ்சகார ப்ரஹ்மேதி (1)
ப்ரஹ்ம- கடவுள்; இதி- என்று; ஸா- அவள்; உவாச ஹ - கூறினாள்; ப்ரஹ்மண; கடவுளின்; விஜயே- வெற்றியில்; வை இதி- நிச்சயமாக; ஏதத்- இந்த; மஹீயத்வம்- மகிழ்ச்சியடைந்தீர்கள்; ப்ரஹ்ம-கடவுள்; இதி- என்று; தத: ஹ ஏவ- அதிலிருந்தே; விதாஞ்சகார- அறிந்தான்.
1. அது கடவுள். நிச்சயமாக அவரது வெற்றியையே நீங்கள் உங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்ந்தீர்கள் என்று தேவி கூறினாள். யட்சனாகத் தோன்றியது கடவுளே என்பதை அதன் பிறகுதான் இந்திரன் அறிந்தான்.
தன்னால் யட்சனை அறிய முடியாது என்பதைக் கண்ட இந்திரன் தேவியைச் சரணடைந்தான். அவள் அவனுக்கு உண்மையை உணர்த்தினாள். நீ சுதந்திரமானவன் அல்ல; அவள் எப்படிச் செய்விக்கிறாளோ அப்படியே செய்ய முடியும். அந்த ஆத்யா சக்தி தந்தால்தான் பிரம்ம ஞானம் கிடைக்கும்... அவளை மீறிச் செல்ல முடியாது என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
ஆன்மாவை அறிந்தவன் மேலானவன்:
ஆன்மாவை அறிந்தவனே உண்மையான நிறைவு பெறுகிறான் என்பதை 2:5ல் கண்டோம். தொடரும் இரண்டு மந்திரங்களில் அத்தகையோரின் பெருமை மேலும் பேசப்படுகிறது.
தஸ்மாத் வா ஏதே தேவா அதிதராமிவான்யான் தேவான் யதக்னிர் வாயுரிந்த்ரஸ்தே ஹ்யேனன்னேதிஷ்ட்டம் பஸ்பர்சுஸ்தே ஹ்யேனத் ப்ரதமோ விதாஞ்சகார ப்ரஹ்மேதி (2)
தஸ்மாத்- எனவே; அக்னி- அக்கினிதேவன்; வாயு;- வாயுதேவன்; இந்த்ர;- இந்திரன்; ஏதே தேவா;- இந்த தேவர்கள்; வை- நிச்சயமாக; அன்யான் - மற்ற; தேவான்- தேவர்கள்; அதிதராம் இவ- மேலானவர்கள்; ஹி- நிச்சயமாக; தே- அவர்கள்; நேதிஷ்ட்டம் பஸ்பர்சு:- நெருங்கித்தொட்டார்கள்; தே ஹி- அவர்களே; ஏனத்- இந்த; ப்ரஹ்ம- கடவுளை; ப்ரதம:- முதலில்; விடதாஞ்சகார- அறிந்தார்கள்.
2. அக்கினி, வாயு, இந்திரன் ஆகிய தேவர்கள் மற்ற தேவர்களைவிட மேலானவர்கள். ஏனெனில் இவர்கள் கடவுளை நெருங்கித் தொட்டிருக்கிறார்கள்; முதன் முதலாக அவரை அறிந்திருக்கிறார்கள்.
தஸ்மாத் வா இந்த்ரோ ஸ்திதராமிவான்யான் தேவான்; ஸ ஹயேனன்னேதிஷ்ட்டம் பஸ்பர்ச, ஸ ஹ்யேனத் ப்ரதமோ விதாஞ்சகார ப்ரஹ்மேதி (3)
3. எனவே இந்திரன் மற்ற தேவர்களைவிட மேலானவன். ஏனெனில் அவன் கடவுளை நெருங்கித் தொட்டிருக்கிறான்; முதன்முதலாக அவரை அறிந்திருக்கிறான்.
ஆன்ம அனுபூதியின் உயர் பரிமாணம் (4-6)
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணர்வை உணர்வதுதான் உண்மையான ஆன்ம அனுபூதி என்பதை 2:4 - இல் கண்டோம். இந்த அனுபூதியின் மற்றொரு பரிமாணத்தை இந்த மந்திரங்கள் கூறுகின்றன. நமது ஒவ்வொரு செயலிலும் ஆன்ம உணர்வைக் காண்பதுபோல் உலகம் முழுவதிலுமே இறையுணர்வைக் காண்பது ஆன்ம அனுபூதியின் உயர் பரிமாணம் ஆகும்.
எல்லாம் இறைவனின் சக்தி:
இறைவனின் பெருமையை இந்த மந்திரம் கூறுகிறது. இறைவனைப் பணிந்து வாழ வேண்டும். ஏனெனில் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன.
தஸ்யைஷ ஆதேசோ யதேதத் வித்யுதோ வ்யத்யுததா (3) இதீன் ந்யமீமிஷதா (3) இத்யதிவைதம் (4)
தஸ்ய- கடவுளின்; ஏஷ- இது; ஆதேச:- விளக்கம்; யத் ஏதத்- எது வித்யுத:- மின்னல்; வ்யத்யுத்யத்- மின்னுவது; ஆ- ஆகா; ந்யமீமிஷத் இதி இத் - இமைகளை இமைக்கச் செய்வது; ஆ- ஆகா; அதிதைவதம்- தெய்வீகம்; இதி- என்று.
4. கடவுளைப்பற்றிய விளக்கம் இது. ஆகா! மின்னல்
மின்னுவது அவரால்! இமைகள் இமைப்பது அவரால்,
ஆகா! இது அவரது தெய்வீக சக்தி.
ஆன்மா:
உலகெங்கும் நிறைந்துள்ள இறைவனே நம்மில் ஆன்மாவாக உள்ளார். நமது உடல்- மனச் சேர்க்கைக்குப் பின்னால் உள்ளது அந்த ஆன்மாவே.
அதாத்யாத்மம் யதேதத் கச்சதீவ ச மனோஸனேன சைததுபஸ்மரதி அபீக்ஷ்ணம் ஸங்கல்ப: (5)
அத- இனி; அத்யாத்மம்- ஆன்மா பற்றி; யத்- எதனால்; மன:- மனம்; ஏதத்- இதனை; கச்சதி இவ- செல்வதுபோல்; அனேன- இதனால்; அபீக்ஷ்ணம்- எப்போதும்; உபஸ்மரதி- நினைக்கிறது; ஸங்கல்ப:- கற்பனை செய்கிறது.
5. இனி ஆன்மா பற்றி பார்ப்போம். ஆன்மாவின் காரணமாகவே மனம் புறவுலகை நாடிச் செல்வது போல் உள்ளது. பொருட்களை நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் ஆன்மாவே காரணம்.
ஆன்மாவை எப்படி தியானிப்பது?
ஆன்மாவை நமது உடல்- மனச் சேர்க்கைக்குப் பின்னால் உள்ள ஆன்ம உணர்வாக, உலகையே இயக்குகின்ற இறையுணர்வாக தியானிப்பதே உண்மையான ஆன்ம தியானம்.
தத்த தத்வனம் நாம இத்யுபாஸிதவ்யம்; ஸ ய ஏததேவம் வேதாபி ஹைனம் ஸர்வாணி பூதானி ஸம்வாஞ்சந்தி (6)
தத் ஹ- அதுவே; தத்வனம்- எல்லா உயிர்களிலும் நிறைந்தது; நாம- அறியப்படுகிறது; தத்வனம் இதி - எல்லா உயிர்களிலும் நிறைந்ததாக; உபாஸிதவ்யம்- தியானிக்க வேண்டும்; ஸ:- அவர்; ய:- யார்; ஏதத்- இந்த; ஏவம்- எல்லா; பூதானி உயிர்களும்; அபி ஸம்வாஞ்சந்தி- நேசிக்கின்றன.
6. ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது. அவ்வாறே அறியப்படுகிறது. எல்லா உயிர்களிலும் நிறைந்ததாக அதனைத் தியானிக்க வேண்டும். ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதை யார் அறிகிறானோ அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன.
யார் எல்லா உயிரினங்களையும் ஆன்மாவிலும், ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ அவன் யாரையும் வெறுப்பதில்லை என்கிறது ஈசாவாஸ்ய உபநிஷதம். எதையும் வெறுக்காத ஒருவனிடம் அன்பு மட்டுமே நிறைகிறது. அவனை அனைத்து உயிர்களும் நேசிக்கின்றன.
யஸ்து ஸர்வாணி பூதானி ஆத்மனி ஏவ அனுபச்யதி
ஸர்வபூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்தே - ஈசாவாஸ்ய உபநிஷதம், 6.
உபநிஷதம். எதையும் வெறுக்காத ஒருவனிடம் அன்பு மட்டுமே நிறைகிறது. அவனை அனைத்து உயிர்களும் நேசிக்கின்றன.
அடிப்படை சாதனைகள்: 7-9
ஆன்ம அனுபூதியைப் பெறுவதற்கான அடிப்படை சாதனைகள் பற்றி இந்த மூன்று மந்திரங்களும் கூறுகின்றன.
உபநிஷதம் போ ப்ரூஹீத்யுக்தா த உபநிஷத் ப்ராஹ்மீம் வாவ த உபநிஷதம் அப்ரூமேதி (7)
போ:- குருநாதா; உபநிஷதம்- ரகசிய அறிவை; ப்ரூஹி - உபதேசியுங்கள்; இதி- என்று; தே- உனக்கு; உபநிஷத்- ரகசிய அறிவையே; உக்தா- சொன்னேன்; ப்ராஹ்மீம்- ஆன்மாவைப்பற்றியே; வாவ- நிச்சயமாக; உநிஷதம்- உபநிஷதம்; தே- உனக்கு; அப்ரூம- சொன்னோம்; இதி- என்று.
7. சீடன்: குருநாதா! ரகசிய அறிவை எனக்கு உபதேசியுங்கள்.
குரு: இதுவரை ரகசிய அறிவையே உனக்குச் சொன்னேன். ஆன்மாவை எப்படி தியானிப்பது என்பது பற்றியே உனக்குச் சொன்னோம்.
உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபூதியிலிருந்து பிறந்தவை; அனுபவ வார்த்தைகள். எனவே வெறும் சம்ஸ்கிருத அறிவாலோ புலமையாலோ அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான், சாதனைகள் செய்பவன், கற்றுணர்ந்தவன், இறைவனில் நிலைபெற்றவன், சிரத்தை உள்ளவன், தன்னையே ஆஹுதியாக அளித்து வாழ்பவன்- இத்தகையோருக்கு மட்டுமே ஆன்மீக ஞானத்தை அளிக்க வேண்டும் என்று உபநிஷதங்கள் உறுதிபடக் கூறுகின்றன. எனவே இது வரை குரு உபதேசித்த உபநிஷத உண்மையை அறிவதற்கு தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சீடன் கேட்கிறான்.
தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்ட்டா வேதா: ஸர்வாங்கானி ஸத்யமாயதனம் (8)
தஸ்யை- அதற்கு; தப:- தவம்:- புலக்கட்டுப் பாடு; இதி கர்ம- ஆகிய சாதனைகள்; ப்திஷ்ட்டா- அடிப்படை; வேதா:- வேதங்கள்; ஸர்வ அங்கானி- எல்லா அங்கங்கள்; ஸத்யம்- உண்மை; ஆயதனம்- உறைவிடம்.
8. அந்த ரகசிய அறிவிற்கு தவம், புலக்கட்டுப்
பாடு போன்ற சாதனைகள் அடிப்படையாக உள்ளன.
வேதங்கள் அதன் அங்கங்களாக உள்ளன. உண்மையே
அதன் உறைவிடமாக உள்ளது.
உபநிஷத உண்மையை உணர்ந்து, ஆன்ம அனுபூதி பெற மூன்றுவிதமான சாதனைகளை இந்த மந்திரம் கூறுகிறது.
1. தவம், புலக்கட்டுப்பாடு போன்ற சாதனைகள்.
2. வேத பாராயணம்: உயர் உண்மைகளைக் கூறுகின்ற நூல்களைப் படித்தல்.
1. ததேதத் ரிசாஸப்யுக்தம்
க்ரியாவந்த: ச்ரோத்ரியா: ப்ரஹ்மநிஷ்ட்டா:
ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ச்ரத்தயந்த:
தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்யாம் வதேத
சிரோவ்ரதம் விதிவத்யைஸ்து சீர்ணம்
முண்டக உபநிஷதம், 3:2.10.
3. உண்மையைக் கடைப்பிடித்தல்: விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் பிடிவாதமாக உண்மை பேசுவது என்ற பொருளில் இதனைக் காணக் கூடாது. பிறர் மனத்தை நோகச் செய்யாத உண்மையே பேச வேண்டும்; அத்தகைய பேச்சை வாக்கினால் செய்கின்ற தவம் என்று வகைப்படுத்துகிறது கீதை.
உண்மை பேச வேண்டும், இனிமையாகப் பேச வேண்டும்; இனியல்லாத உண்மையைப் பேசக் கூடாது. உண்மை அல்லாத இனியதையும் பேச் கூடாது. இதுவே சான்றோர்கள் காலம்காலமாகக் கடைப்பிடிக்கின்ற தர்மம் ஆகும் என்றே மனுவும் கூறுகிறார்.
யோ வா ஏதாமேவம் வேதாபஹத்ய பாப்மானமனந்தே ஸ்வர்கே லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்ட்டதி ப்ரதிதிஷ்ட்டதி (9)
ய:- யார்; வை - உறுதியாக; ஏதாம்- இதனை; ஏவம்- இவ்வாறு; வேத- அறிகிறானோ; பாப்மானம்- பாவங்கள்; அபஹத்ய- அகன்று; அனந்தே- முடிவுற்ற; ஜ்யேயே- மேலான; ஸவர்கே லோக-ஆன்ம உணர்வில்; ப்ரதிதிஷ்ட்டதி- நிலைபெறுகிறான்.
9. யார் இதனை இவ்வாறு உறுதியாக அறிகிறானோ
அவனது பாவங்கள் அகல்கின்றன. முடிவுற்றதும்
மேலானதுமான ஆன்ம உணர்வில் அவன் நிலை பெறுகிறான்.
1. அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்... வாங்மயம் தப உச்யதே கீதை, 17, 15
2. ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: ஸனாதன: மனு, 4. 138.
8-ஆம் மந்திரம் கூறிய சாதனைகளை அறிந்து, அவற்றை உறுதியாகக் கடைப்பிடித்து, தெய்வத்திடம் பிரார்த்தனையுடன் வாழ்பவன் ஆன்ம அனுபூதி பெறுகிறான், ஆன்ம உணர்வில் நிலைபெறுகிறான் என்ற நம்பிக்கை வாக்குகளுடன் உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
இதி கேனோபநிஷதி சதுர்த்த: கண்ட: