மழை வேண்டி வருண யாகம்: பக்தர்களை குளிர வைத்தது மழை!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில், மழை வேண்டி வருண யாகம் நடந்தது.நந்தி சிலையை சுற்றி, தண்ணீர் நிரப்பி வருண யாகம், தெப்பக்குளத்தில் வருண ஜெபம் உட்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அஜித் செய்தார்.
பக்தர்களை குளிர வைத்தது மழை: சித்திரை பொங்கல் விழாவில், பக்தர்களின் மனதை, கோடை மழை குளிர வைத்தது. சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா, பத்து நாட்களாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கயர் குத்து, அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தப்பட்டது. கோடை அக்னி நட்சத்திரம் போது நடைபெறும் சித்திரை பொங்கல் விழாவில், வெயில் உக்கிரம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகரிக்கும் முன்பே, நேர்த்திக்கடன் செலுத்த காலையிலே, பகத்தர்கள் திரள்வது வழக்கம். இரு நாட்களாக, வானம் கருமேகம் சூழ்ந்து மப்பும், மந்தாரமாக இருந்து, அவ்வப்போது மழையும் பெய்தது. குளிர்ச்சியான சூழ்நிலையால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மழை பெய்தாலும் பக்தர்கள் கோயிலுக்கு அதிகம் வந்தனர். இதமான சூழ்நிலையால், விழா களைகட்டியது.