கரிய காளியம்மன் கோவில் குண்டம் விழா!
பவானி: பவானி அடுத்த, அம்மாபேட்டையில் கரிய காளியம்மன், மாரியம்மன், ஓம் காளியம்மன், கிட்டம் பட்டியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 23ம் தேதி கிராம சாந்தியும், 24ம் தேதி கம்பம் நடுதலும், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, குண்டம் விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவில் முன்புள்ள குண்டத்துக்கு தீ மூட்டப்பட்டது. நேற்று காலை, முப்பேடு, படைகளம் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், பொங்கவாளி கரடு சென்று, அம்மை அழைத்து வரப்பட்டு, ஆண், பெண், குழந்தைகள் என, பக்தர்கள் குண்டம் இறங்கினர். மாலையில், அலகு குத்தி, காவடி எடுத்து, அக்னி கரகம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை அடைந்தனர். இன்று, ஓம் காளியம்மன் கோவிலுக்கு, அம்மை அழைத்து வந்து, இரவில் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும், நாளை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.