வீர சக்க தேவி கோயில் திருவிழா
தூத்துக்குடி,: தூத்த்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா நாளை ( மே 9) துவங்குகிறது. இன்று (மே 8)மாலை 6 மணிமுதல் மே 10 மாலை ஆறு மணிவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவினை கலெக்டர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஞ்சலங்குறிச்சி கோட்டை பகுதியில், மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் இரு நாட்கள் திருவிழா நடத்தப்படும். வீர சக்கதேவி கோயில் திருவிழா இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இந்த திருவிழாவில் கட்டபொம்மன் வம்சாவாளியினர் தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்பார்கள்.
கலை நிகழ்ச்சிகளுக்கு தடை: தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் இருப்பதால் திருவிழாவில் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது. கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகக் குழுவினர் விழா அமைதியாக நடக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
144 தடையுத்தரவு: கோயில் திருவிழாவின் போது தங்களது வீரத்தினை காட்டுவதற்காக கத்தி, சுருள் கத்தி, வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் வருகை தருவார்கள். இம் முறை ஆயுதங்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் மே. 8 மாலை 6 மணிமுதல் மே 10 மாலை ஆறு மணி வரை 144 தடையுத்தரவு அமலில் இருக்கும், என கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். வேறு கூட்டங்கள் நடத்த வேண்டும் , என்றால் எஸ்.பி., யிடம் முன் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.