உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழா: இன்று திக் விஜயம்!

மதுரை சித்திரை திருவிழா: இன்று திக் விஜயம்!

மதுரை: சித்திரை விழாவின் ஒன்பதாம் நாளாக இன்று(மே 9) திக் விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக் விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் அஷ்ட திக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடக்கிறது. பின், வடக்கு மாசி-கிழக்கு மாசி வீதி சந்திப்பு லாலா ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்திற்கு இந்திர விமானத்தில் அம்மன் எழுந்தருளுவார்.

நாளை திருக்கல்யாணம்: விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக கோயில் வடக்கு, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் மீனாட்சிக்கும், சொக்கருக்கும் திருக்கல்யாணம் நாளை (மே 10) காலை 10.30 மணிக்கு மேல் காலை 10.54 மணிக்குள் நடக்கிறது. இரவு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், யானை வாகனத்தில் சுவாமி வீதிவுலா வருவர். சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணிக்கு தனியார் சார்பில் திருக்கல்யாண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டாபிஷேகம் : மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனுக்கு நேற்று கிரீடம் சாற்றி, பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இன்று(மே 9) ஒன்பதாம் நாளாக திக் விஜயம் நடக்கிறது. சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று காலை ஊடல் லீலை நடந்தது. நேற்றிரவு 7.04க்கு மேல் 7.30 மணிக்குள் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது. பின் அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று, தக்கார் கருமுத்து கண்ணனிடம் சிவாச்சார்யார்கள் வழங்கினர். அவர் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார். கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், மேயர் ராஜன்செல்லப்பா மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின் மாசி வீதிகளில் தங்க வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுவாமி வீதிவுலா வந்தனர். மீனாட்சி அம்மன் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்பதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !