உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நமசிவாய வாழ்க.. கோஷம் முழங்க: நாயன்மாருக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்தி!

நமசிவாய வாழ்க.. கோஷம் முழங்க: நாயன்மாருக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்தி!

அவிநாசி : சிவகண பூத பஞ்ச வாத்தியம் முழங்கி, சிவாச்சாரியார் வேத பாராயணங்களை ஓத, ஓதுவா மூர்த்திகள் தேவாரம் பண்ணிசைக்க, பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம், அவிநாசியில் கோலாலகமாக நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு துவங்கியது. கோவில் தீப ஸ்தம்ப வளாகத்தில், மூஞ்சூறு வாகனத்தில் விநாயக பெருமான், ரிஷப வாகனத்தில் அவிநாசியப்பர், காமதேனு வாகனத்தில் கருணாம்பிகை அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், மயில் வாகனத்தில் சுப்ரமணியர் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார் குழு மற்றும் திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தார் ஆகியோர் சிவகண பூத பஞ்ச வாத்தியங்களை இசைக்க, பெங்களூரு வேத விக்ஞான் மஹா வேத பாடசாலை மாணவர்கள் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்ய, ஓதுவா மூர்த்திகள் திருமுறை தேவாரத்தை பண்ணிசைக்க, அவிநாசி கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். சிவனடியார்களும், பக்தர்களும், "நமசிவாய வாழ்க என கோஷமிட்டனர். பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேக்கிழார் புனிதர் பேரவை நிறுவனர் முத்து நடராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். அதன்பின், வாண வேடிக்கை, நாதஸ்வர இன்னிசை, சிவனடியார் குழு வாத்தியம் ஆகியவற்றுடன் வீதியுலா காட்சி நடந்தது. இரவு 9.20 மணிக்கு துவங்கிய சுவாமி புறப்பாடு, நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, நள்ளிரவு 1.00 மணிக்கு கோவிலை வந்ததடைந்தது. பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் வழங்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வழி விட்ட வருண பகவான் : கடந்த இரு நாட்களாக, அவிநாசி வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 8.00 மணி முதல் சுவாமி வீதியுலா முடியும் வரை ஒரு துளி மழை கூட பெய்யவில்லை. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சிக்காக, சற்று நேரம் வருண பகவான் வழி விட்டிருக்கிறார் என்றே சிவனடியார்களும், பக்தர்களும் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !