நாச்சியார் திருக்கோலத்தில் அருள்பாலித்த வீரராகவர்!
ADDED :4169 days ago
திருவள்ளூர் : சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வீரராகவ பெருமாள், நேற்று, நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, நடந்து வருகிறது. தினமும் காலை, இரவு வேளைகளில், வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் புறப்பாடும், கோவில் வளாகத்தில் பத்தி உலாவும் நடக்கிறது.விழாவின், 5வது நாளான நேற்று, காலை 4:00 மணிக்கு, உற்சவர் வீரராகவர், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 10:00 மணியளவில், உற்சவருக்கு, திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, பத்தி உலா நடந்தது. இரவு 7:00 மணியளவில், யாளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா வந்தார். இந்நிகழ்ச்சிகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.