உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரைத் திருவிழா குடிநீர் வசதிக்கு ரூ.85 லட்சம்!

மதுரை சித்திரைத் திருவிழா குடிநீர் வசதிக்கு ரூ.85 லட்சம்!

மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக, பக்தர்களுக்கு 85 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயில் குடிநீர், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என, ஐகோர்ட் கிளையில் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்தார். மதுரை ஆறுமுகம் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போது, லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அரசுத் தரப்பில், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வதில்லை. சித்திரைத் திருவிழா மே 1 முதல் 17வரை நடக்கிறது. மருத்துவம், ஆம்புலன்ஸ், கழிப்பறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்துதருமாறு மதுரை கலெக்ட, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் பதில் மனு: சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம், திருக்கல்யாணம், எதிர்சேவை, பூப்பல்லக்கு, அழகர் ஆற்றில் இறங்குதல் முக்கிய நிகழ்வுகளாகும். மக்கள் கூடும் ஆடி வீதிகள், சித்திரை வீதிகள், மாசி வீதிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை, சுத்தம் செய்கின்றனர். 24 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும். 12 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி செய்யப்படும். குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக 85 லட்சத்து 65 ஆயிரத்து 890 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம், அவசர சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆடி வீதிகளில் உள்ள கழிப்பறையை, பக்தர்கள் பயன்படுத்தலாம். பக்தர்களுக்காக மாநகராட்சி, அறநிலையம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, தீயணைப்பு, சுகாதாரம், மின்வாரியம், பி.எஸ்.என்.எல்., போக்குவரத்து, காவல்துறை உட்பட 16 துறைகள் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !