திருச்சி புருஷோத்தம பெருமாள் கோவில் தேரோட்டம்!
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், உத்தமர் கோவில், புருஷோத்தம பெருமாள் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 வைணவ திருக்கோவில்களில் ஒன்றானதும், மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகளுடன் எழுந்தருளியுள்ள திருத்தலம் உத்தமர் கோவில். இந்த கோவில் சித்திரை தேரோட்டம், நேற்று நடந்தது. கடந்த, 4ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து, விழா நாட்களில் சூர்யபிரபை, அனுமந்த வாகனம், கருடவாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 10 மணிக்கு, தோரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர். திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் புகழேந்தி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா, காசாளர் சாய்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பிக்சாண்டார்கோவில் பஞ்., தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.