கோவை கருமாரியம்மனுக்கு நாளை திருக்கல்யாணம்!
கோவை : சேரன்மாநகர் அருகேயுள்ள கற்பக விநாயகர், கருமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (மே 14) நடக்கிறது. கோவிலில் திருகல்யாண உற்சவ திருவிழா மே 6ல் கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. நாளை காலை 6.00 மணிக்கு அம்பாள் நகர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து சேரன்மாநகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வழியாக அலங்காரத்துடன் கூடிய கருமாரியம்மன் சக்தி கரகம் மற்றும் துணைக் கரகம், விளையாட்டு கரகம், மேளதாள வாத்தியங்கள், வாணவேடிக்கையுடன் திருவீதி உலா வந்து, கோவிலை வந்தடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11.00 மணிக்கு யாககுண்டம் அமைத்து வேள்வி நடத்தி, அக்னி சாட்சியாய் கருமாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மதியம் 12.00 மணிக்கு மகா அன்னதானம், பிற்பகல் 3.00 மணிக்கு அம்பாள் நகர், ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் அக்னி பூவோடு ஏந்தி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.