அழகிய மணவாள பெருமாள் கோவில் மண்டபம் சேதம் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
வாலாஜாபாத்; ஏரிவாய் கிராமத்தில் பாழடைந்த நிலையில் உள்ள, அழகிய மணவாள பெருமாள் கோவில் மண்டபத்தை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது ஏரிவாய் கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டில், கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இக்கோவில் வளாகத்தில் நுழைவாயிலோடு இணைந்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் முறையான பராமரிக்காததால், தளத்தின் பக்கவாட்டு பகுதி உள்ளிட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்து உள்ளது. மேலும், கட்டடத்தின் மீது மரக்கன்றுகள் வளர்ந்து, அதன் வேர் துளையிட்டு கட்டடத்தை சேதப்படுத்தி உள்ளது. இதனால், பக்தர்கள் இந்த மண்டபம் மற்றும் அதன் நுழைவாயிலை பயன்படுத்தாமல், மாற்று வழியில் கோவிலுக்கு சென்று வருகின்றனர். எனவே, கோவிலில் சேதமடைந்துள்ள மண்டபத்தை சீரமைத்து, அதன் மீது வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அகற்றி, புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.