உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜபெருமாள் கருடசேவை கோலாகலம்!

காஞ்சி வரதராஜபெருமாள் கருடசேவை கோலாகலம்!

காஞ்சிபுரம்: பக்தர்கள் வெள்ளத்தில், வரதராஜபெருமாள் கருட வாகனத்தின் மீது, வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோவிலில், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன், வைகாசி மாத பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதி்ல், மூன்றாம் நாள் உற்சவமான பிரசித்தபெற்ற கருடசேவை உற்சவம் நடந்தது. இதில், அதிகாலை 4:20 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தின் மீது, வரதராஜ பெருமாள் திருஆபரணம் அணிந்து எழுந்தருளினார். பின்னர், கோபுர வாசலில், தொட்டாட்சியர் சேவை மற்றும் கோபுர தரிசன சேவை நடந்தது. பின்னர், முன்புறம் அத்யபாக கோஷ்டியும், பின்புறம் வேதபாராயண கோஷ்டிகள் வேதமந்திரங்கள் ஓத, சூரிய மேளம், பேரிமேளம், குதிரை, யானை புடைசூழ, பக்தர்கள் வெள்ளத்தில் கருட வாகனத்தின் மீது வரதராஜபெருமாள், பிள்ளையார்பாளையம் மற்றும் நான்கு ராஜவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், பகல் 12:30 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தார். அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை தரிசிப்பதற்காக நகரத்தில் குவிந்தனர். மேலும், பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன. மாவட்ட எஸ்.பி.விஜயக்குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !