திருப்பணிகள் துவங்காததால் பக்தர்கள் வேதனை!
வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில்களில் திருப்பணியை துவக்காததால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள, வேதபுரீஸ்வரர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் ஆகியவை பிரசித்தி பெற்றவையாகும். இந்த பழமைவாய்ந்த கோவில்களுக்கு, தினசரி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவில்களுக்கு சொந்தமாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான, ஏராளமான சொத்துக்களும் உள்ளன. வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு, கடைசியாக, 1998ம் ஆண்டு, ஜூலை 26ம் தேதியன்றும், வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு, 1999ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதியன்றும் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில்களில் திருப்பணி மேற்கொண்டு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். இதன்படி, வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
வேதபுரீஸ்வரர் கோவிலில், கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியும், இதை தொடர்ந்து, வரதராஜப் பெருமாள் கோவிலிலும் பாலாயண பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, இரு கோவில்களிலும் திருப்பணிகளை மேற்கொள்ள, பொதுப் பணித் துறை பொறியாளர்களை கொண்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது. தொழில்நுட்பக் குழுவினர், கோவிலை பார்வையிட்டு, மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை பட்டியலிட்டு, மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்து விட்டனர். இருந்தபோதும், 18 மாதங்களுக்கு மேலாகியும், இரு கோவில்களிலும் திருப்பணி வேலைகள் துவக்கப்படவில்லை. பாலாயணம் செய்யப்பட்டு விட்டதால், மூலவரை தவிர்த்து, பெரும்பாலான சாமி விக்ரகங்கள் துணியால் மூடப்பட்டு, பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும், சுவாமி வீதியுலாவும், மாசிமக தீர்த்தவாரிக்கு செல்வது போன்றவையும் தடைபட்டுள்ளது. பாலாயணம் நடந்து, 18 மாதங்கள் கடந்தும், திருப்பணி வேலைகளை துவக்காததால், பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இனியும் காலம் கடத்தாமல், இரு கோவில்களிலும் திருப்பணிகளை உடனடியாக ஆரம்பித்து, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.