உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார்கோவில் திருவிழாவுக்கு தடை : அபிஷேக பாலை கண்மாயில் ஊற்றினர்!

அய்யனார்கோவில் திருவிழாவுக்கு தடை : அபிஷேக பாலை கண்மாயில் ஊற்றினர்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தடை உத்தரவு காரணமாக அய்யனாருக்கு அபிஷேகம் செய்யவேண்டிய பாலை கண்மாயில் ஊற்றிச் சென்ற பரிதாப சம்பவம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த பேயாடிக்கோட்டையில் அருள்மிகு கருப்பர் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பேயாடிக்கோட்டை, உறையூர், சுந்தராபுரம், குளத்தூர், புத்தாம்பூர், எத்திச்சேரி உள்ளிட்ட, 13 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அய்யனாருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ம் தேதி காப்புகட்டுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர், 10 நாட்கள் நடைபெறவுள்ள அய்யனார்கோவில் திருவிழாவில் ஏதேனும் ஒருநாளில் மண்டகபடி நடத்த அனுமதி கோரினர். இதை ஏற்க மறுத்த விழாக்குழுவினர், திருவிழாவின்போது 10 நாட்களும் மண்டகபடி நடத்த ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றபட்டு வருவதால் இதில் மாற்றம் செய்ய முடியாது. திருவிழாவில் 10 நாட்களை தவிர்த்து, 11வது நாளில் மண்டகபடி நடத்துமாறு கூறினர்.

இதை ஏற்க மறுத்த அவர்கள் 10 நாட்களில் ஏதேனும் ஒருநாளில் மண்டகபடி நடத்த அனுமதிவேண்டும் என நிபந்தனை விதித்தனர். இருதரப்பும் தங்களுடைய நிலைபாட்டில் உறுதியாக இருந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார், இருதரப்பினர் இடையே சமாதான பேச்சு நடத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் வேறு வழியின்றி மோதலை தவிர்ப்பதற்காக பேயாடிக்கோட்டையில் கடந்த 5ம் தேதி முதல் 16ம் தேதிவரை தொடர்ந்து, 12 நாட்கள் "144 தடை உத்தரவு பிறப்பித்தனர். கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆண்டாண்டு காலமாக நடந்துவந்த அய்யனார்கோவில் பங்குனித்திருவிழா இந்த ஆண்டு தடைபட்டது. இவை அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருந்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுவதற்காக வழக்கம்போல் நேற்று(14ம் தேதி) காலை 13 கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பக்தர்கள் 300 பேர் மேளதாளம் முழங்க பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோவிலை நெருங்கவிடாமல், 500 அடி தூரத்துக்கு முன்பாக பக்தர்களை வழிமறித்த போலீஸார், தடை உத்தரவை மேற்கோள் காட்டி கோவிலுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். தடையை மீறினால் கைது செய்வதாகவும் எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. வேறுவழியின்றி அய்யனாருக்கு அபிஷேகம் செய்யவேண்டிய பாலை அப்பகுதியில் உள்ள கண்மாயில் ஊற்றிய பக்தர்கள், கண்மாய் கரையில் காவடிகளை இறக்கிவைத்து சூடம் ஏந்தி வழிபட்ட பின் கலைந்து சென்றனர். மண்டகபடி பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே அறந்தாங்கி அடுத்த மாங்குடி அம்மன் கோவில் திருவிழா முடக்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக போயாடிக்கோட்டை அய்யனார்கோவில் திருவிழாவும் முடக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !