நான்கு கிராம மக்கள் நடத்தும்.. திருவேலங்காட்டில் ஏரித்திருவிழா!
வேலூர்: வேலூர் அருகே, நான்கு கிராம மக்கள் சேர்ந்து நடத்தும், ஏரித்திருவிழா, நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த திருவேலங்காட்டில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பொற்கொடி அம்மன் ஏரித்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். திருவேலங்காடு, வல்லண்டராமம், அன்னாசிபாளையம், பனங்காடு ஆகிய, நான்கு கிராம மக்கள் சேர்ந்து, இந்த விழாவை நடத்துகின்றனர். பல நூற்றாண்டுகளாக, இந்த விழாவை, நான்கு கிராம மக்கள் சேர்ந்து கொண்டி வருகின்றனர்.
இந்தாண்டு, பொற்கொடி அம்மன் ஏரித்திருவிழா, கடந்த, 30ம் தேதி, காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 11ம் தேதி, ஏரியில் பச்சை போடுதல் நடந்தது. 12ம் தேதி காலை, பொற்கொடி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று, திருவேலங்காட்டில், ஏரித்திருவிழா துவங்கியது. இதற்காக, பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரில், பொற்கொடி அம்மன் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முதலில், வல்லண்டராமம் கிராமத்தில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து, அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு வழியாக, திருவேலங்காடு ஏரிக்கு, தேர் வந்தடைந்தது. அங்கு, ஏரித்திருவிழா நடந்தது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 50,000 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பக்தர்கள், கிடா வெட்டி, நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
விழாவை முன்னிட்டு, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், அரக்கோணம், பெங்களூரூவில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், வேலூர் கோட்டத்தைச் சேர்ந்த, 100 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாளை, பொற்கொடி அம்மன் தேர், திருவேலங்காட்டிலும், 16ம் தேதி, வல்லண்ட ராமத்திலும், வீதி உலா நடக்கிறது.