ஸ்ரீவி., கோயில் திடலில் கழிவுநீர்: பக்தர்கள் வேதனை!
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் திடலில், கழிவுநீர் குளம் போல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதை, நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, விருதுநகர், கோவில்பட்டி, சங்கரன்கோவில், சிவகாசி, மதுரை உட்பட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். தற்போது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகளவு பக்தர்கள் வந்து, முடி காணிக்கை, பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி வாறுகாலில் வரும் கழிவுநீர், வடமலை குறிச்சி கண்மாய் பகுதி செல்கிறது. இதில் தேசிய நெடுஞ்சாலையின் அடியில் வாறுகால் செல்கிறது. இதில், பல ஆண்டுகளாக அடைப்பு ஏற்பட்டு, சிறு மழைக்கே தண்ணீர் செல்ல முடியாத படி ,கோயில் திடலில் தேங்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி, துர்நாற்றம் வீசுவதுடன், பக்தர்கள் கோயிலுக்கு வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், வாறுகால் ரோட்டை காட்டிலும், பள்ளமாக இருப்பதால், எளிதில் மண் விழுந்து நிரம்பி விடுகிறது. மழைக்காலங்களில், இக்கழிவுநீரை மிதித்து தான், பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும் நிலை இருந்து வருகிறது. இப்பிரச்னை குறித்து, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல முறை கூறியும், அதிகாரிகள் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க, நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் ஒத்துழைப்புடன், ரோட்டில் செல்லும் வாறுகாலை உயரமாக கட்டி, சிறு பாலம் அமைத்தால், இப்பகுதியில் கழிவுநீரும் தடங்கலின்றி செல்லும். பக்தர்களும் நிம்மதியடைவர்.