சேதுக்கரை கடற்கரையில் படித்துறை: பக்தர்கள் வலியுறுத்தல்!
கீழக்கரை : சேதுக்கரை கடற்கரையில் படித்துறை வசதி ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரை ஓரத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் வந்து செல்கின்றனர். மேலும் மாத அமாவாசை நாட்களில் உள்ளூரைச் சேர்ந்தோர் புனித நீராடுகின்றனர். கடலில் நீரோட்டம் ஏற்படும் போது ராட்சத அலைகள் ஆஞ்சநேயர் கோயில் தடுப்புச்சுவரை கடந்து கடல் நீர் உள்ளே புகுகிறது. இக்கால கட்டத்தில் இடுப்பளவு உயரும் கடல் நீரில் புனித நீராடும் பக்தர்கள் அச்சமடைகின்றனர். மேலும் கடலில் பக்தர்கள் விட்டுச் சென்ற தர்ப்பண பொருட்கள், வேட்டி, சேலைகள் கரை ஒதுங்குகின்றன. இதனை கடந்து குளிக்கச் செல்லும் பக்தர்கள் மனஉளச்சல் அடைகின்றனர். அச்சமின்றி புனித நீராட, சேதுக்கரை கடற்கரையில் படித்துறை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.