அக்னி வசந்த உற்சவத்தில் துரியோதனன் படுகளம்!
ஆர்.கே.பேட்டை : அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று, துரியோதணன் படுகளம் நடந்தது. இதில், மகனை பறிகொடுத்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை துடைப்பத்தால், நைய புடைத்தாள். இதனால், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் திரவுபதியம்ம்ன கோவிலில், கடந்த 8ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணம் கடந்த திங்கட்கிழமை திரவுபதி, தர்மர் திருக்கல்யாணம், செவ்வாய் சுபத்திரை, அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. வெள்ளிக்கிழமை அலகு பானை எனும் பூங்கரகம் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று காலை, துரியோதனன் மற்றும் துச்சாதனன் 18ம் நாள் போரில், பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். தன் மகன்களை பறிகொடுத்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை துடைப்பத்தால் நைய புடைத்தாள். இதனால், மிரண்டு ஓடிய பக்தர்கள், பின் தாங்களாக விரும்பி அந்த அடியை ஏற்று கொண்டனர். மாலை 6:00 மணியளவில், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. திருத்தணி திருத்தணி ஒன்றியம், குடிகுண்டா, திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம், கூளூர் மற்றும் ராமஞ்சேரி ஆகிய நான்கு திரவுபதியம்மன் கோவிலில்களில் கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. தினமும், காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:30 மணிக்கு, 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.