சோழர் காலத்து கோவில் புதுப்பிப்பு: தடுத்து நிறுத்திய அறநிலைய துறை!
நந்தம்பாக்கம்: மிகவும் பழமை வாய்ந்த கோவில் புதுப்பிக்கும் பணி, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. நந்தம்பாக்கம், தர்மராஜபுரம் பகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட, கரியமாணிக்கபெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான அந்த கோவிலை புதுப்பிக்கும் பணியை, கோவில் தர்மகர்த்தா மற்றும் பகுதிவாசி கள் முன்னின்று நடத்தினர். கடந்த ஒரு ஆண்டாக பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவில் விக்கிரகங்களை மாற்றிவைக்கும் பணி துவங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்த, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், கோவில் அறநிலைய துறைக்கு சொந்தமானது. அதை நாங்கள் தான் நிர்வாகிப்போம் என கூறி, தடுக்க முயன்றனர். எனினும், அதை பொருட்படுத்தாத பகுதிவாசிகள், கட்டுமான பணியை தொடர்ந்தனர். அதில், பகுதிவாசிகளுக்கும், அறநிலைய துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அறநிலைய துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.