திருக்கோவிலூர் தெப்பக்குளத்தை புனரமைக்க நடவடிக்கை தேவை!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தெப்பக்குளம் தண்ணீர் இன்றி, மண்டபம் இடிந்து பொலிவிழந்துள்ளது. திருக்கோவிலூர் பழமையான நகரம். திட்டமிட்டு வடிவமைத்த நகரில் நிலத்தடி நீரை பாதுகாக்க ஆங்காங்கே குளங்களை மன்னர்கள் வெட்டினர். இந்த குளங்களுக்கு தண்ணீர் வருவதற்கு ஏரியில் இருந்து பாதாள கால்வாயும் ஏற்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகளால் பாதாள கால்வாய் இன்று மண்புதைந்து குளத்திற்கு தண்ணீர் வராமல் வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கிறது. இதனால் எப்போதும் தண்ணீர் வழியும் குளத்திற்கு மத்தியில் கம்பீரமாக நின்ற மண்டபம் இடிந்துள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சியால் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 அடி ஆழத்தில் தண்ணீர் வந்த நிலையில், தற்போது 250 ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகள் வறட்சி நீடித்த போதும் இந்த அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது இல்லை. அதற்கு காரணம் தென்பெண்ணையில் தண்ணீர் சென்றால் ஏரி நிரம்பும், ஏரி நிரம்பினால் பாதாள கால்வாய் மூலம் குளங்கள் நிரம்பிவழியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து எத்தனை ஆண்டுகள் காய்ந்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத நகரமாக திருக்கோவிலூர் இருந்தது. தற்போது இந்த நிலைகள் எல்லாம் மாறியது. ஆக்கிர மிப்பு, பாதாள கால்வாயை முறையாக பராமரிக்காதது. குளத்தை கோவில் நிர்வாகம் பராமரிப்பதா. பேரூராட்சி நிர்வாகம் நிர்வகிப்பதா என்ற சிக்கல் உள்ளது. இதனால் குளம் வற்றி நகரம் வறண்டு கிடக்கிறது. வறண்டு கிடக்கும் குளத்தில் பல மீட்டர் ஆழத்திற்கு மண் சேர்ந்துள்ளதால் இதனை அகற்றி, சிதைந்த மண்டபத்தை புனரமைக்க வேண்டும். புராதான நகரமாக முதல்வர் அறிவித்த நிலையில், அதற்கான நிதியை பயன்படுத்தி குளத்தை சீரமைக்கவும், பாதாள கால்வாயை புனரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.