பாரத சூத்திரதாரி கண்ணனுக்கு லட்சத்து எட்டு ரோஜா உற்சவம்!
ஆர்.கே.பேட்டை: மகாபாரதத்தின் சூத்திரதாரி கண்ணன், திருமால் அவதாரத்தில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளினார். லட்சத்து எட்டு ரோஜா மலர்களால் சுவாமிக்கு உற்சவம் கொண்டாடப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் திரவுபதியம்மன் அக்னி வசந்த உற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, மகாபாரத சூத்திரதாரி கண்ணன், நேற்று முன்தினம் திருமால் அவதாரத்தில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளினார்.
சுவாமிக்கு பிரத்யேகமாக பெங்களூரில் இருந்து, ஒரு லட்சத்து எட்டு ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டு, அலங்காரம் நடந்தது. பல வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு தங்க கவசமும், நவரத்தின மாலையும் அணிவிக்கப்பட்டன. வாண வேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க, கோவிந்தா கோஷம் எதிரொலிக்க சுவாமி வீதியுலா வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு நாள் திருவிழாவாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவம், இந்த ஆண்டு, 10 நாள் திருவிழாவாக நடத்தப்பட்டது.