உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவில் விழா; 10 ஆண்டுக்கு பின் கிடாய் வெட்டு!

பகவதி அம்மன் கோவில் விழா; 10 ஆண்டுக்கு பின் கிடாய் வெட்டு!

வெள்ளக்கோவில் : வேலப்ப நாயக்கன் வலசு பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா, 10 ஆண்டுகளுக்கு பின், கிடாய் வெட்டி கொண்டாடப்படுகிறது. வெள்ளக்கோவில், வேலப்பநாயக்கன்வலசு பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு கடந்த 13ம் தேதி இரவு நடந்தது. ஏழு நாட்களாக, காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர் கிணற்றில் கும்பம் தாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கிருந்து, அம்மை அழைத்தலும், பகவதி அம்மனுக்கு கும்பம் தாலித்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இன்று (மே 21) காலை, கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், பொங்கல் வைத்தலும், இரவில் விநாயகர், பகவதி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நாளை (மே 22) காலை குதிரை வாகனம் கண் திறத்தல், கிடாய் வெட்டுதல், இரவில் பகவதியம்மன் கோவில் முன் எருமைக்கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. பகவதி அம்மன் கோவிலில் முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால், அம்மனுக்கு சக்தி குறைந்ததாக பக்தர்கள் கருதினர். கடந்தாண்டு முருகனுக்கு முறைப்படி பூஜை, சிறப்பு யாகங்கள் செய்து காவிரி ஆற்றில் முருகனை வைத்தனர். அப்போது, ஊரில் மழை பெய்தது. கடந்த 10 ஆண்டுக்கு பின், இந்தாண்டு முதன்முறையாக, கிடாய் வெட்டி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. ஏராளமான கிடாய்களை, பக்தர்கள் காணிக்கையாக அம்மனுக்கு செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !