மயில்ரங்கம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு!
வெள்ளக்கோவில் : வெள்ளக்கோவில், மயில்ரங்கத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூச்சாட்டு கடந்த ஆறாம் தேதி நடந்தது. தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் பூஜை நடந்து வருகிறது. மயில்ரங்கம் மாரியம்மன் கோவில் மொட்டக்காளிவலசு, பாப்பாவலசு, சுந்தராடிவலசு, மூத்தநாயக்கன்வலசு, ராகுவையன்வலசு, வேலப்பநாயக்கன்வலசு, இலுப்பைக்கிணறு உட்பட 18 கிராமங்களுக்கு சொந்தமானது. கிராம மக்கள் கடந்த 13ம் தேதி முதல், கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர். நாளை வரை தினமும் இரவில் பூவோடு எடுத்து கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று பொங்கல்விழா, நாளை அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல்,கம்பம் கலைத்து கங்கை சேர்த்தல் நடக்கிறது. வரும் 23ம் தேதி மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை மயில்ரங்கம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.