பழநியில் பக்தர்கள் வாகனத்திற்கு ஆபத்து: போலீசார் எச்சரிக்கை!
பழநி : பழநி அடிவாரப்பகுதி, கிரிவீதியில் தொடர்ந்து கார் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் கிரிவீதிமுழுவதும், எச்சரிக்கை சுவரொட்டிகளை போலீசார் ஒட்டியுள்ளனர். கோடைவிடுமுறை எதிரொலியாக, பழநிக்கு வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த, பக்தர்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, பழநிகோயில் நிர்வாகம் சார்பில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் தளம் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், மேற்கூரை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இங்கு இல்லை. இதனால் அடிவாரம் பகுதிகளில் கிரிவீதி முழுவதும் மர நிழல்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இவ்வாறு பாதுகாப்பு இல்லாத நிலையில் வாகனங்களை நிறுத்துவதால், மர்மநபர்கள் எளிதாக கார்களில் உள்ள பொருட்களை திருடிவந்தனர். தற்போது உச்சகட்டமாக கார்களை திருட துவங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரிவீதி வின்ச் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் திருடப்பட்டுள்ளன. திருட்டை தவிர்ப்பதற்காக, கிரிவீதியில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும், காரில் டிரைவர் இருக்க வேண்டும், முறையாக காரை "லாக் செய்யவேண்டும் என, நோட்டீஸ் அடித்து, போலீசார் கிரிவீதி முழுவதும் ஓட்டியுள்ளனர். துண்டு பிரசுரங்களையும் வழங்குகின்றனர்.
பக்தர்கள் கோரிக்கை: ஆண்டிற்கு பலகோடி ரூபாய் வருமானமுள்ள, பழநிகோயில் நிர்வாகம், சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடத்தில், மேற்கூரை வசதிசெய்து தரவேண்டும். சுற்றுச்சுவர் கட்டி செக்யூரிட்டிகளை நியமிக்கவேண்டும். இதுபோல் செய்தால் பக்தர்கள் வாகனங்களை விட்டுவிட்டு நிம்மதியாக சுவாமி தரிசனத்திற்கு சென்றுவரமுடியும். அடிப்படை வசதிகளை செய்துகொடுத்துவிட்டு, இதன்பின் அனுமதியில்லாத இடத்தில் வாகனங்களை நிறுத்தினால், அபராதம் விதிக்கலாம், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.