செஞ்சி பெருமாள் கோவில் நாளை உற்சவம் துவக்கம்!
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் குடைவரை கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நாளை (25ம் தேதி ) காலை 7.30 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ன்று மாலை அங்குரார்பணமும், ரங்கநாதர், தாயாரம்மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. நாளை காலை 7.30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் கொடிமரம் அருகே அருள்பாலிப்பர். கருட கொடியேற்றத்தை தொடர்ந்து சூர்ய பிரபையில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. இரண்டாம் நாள் சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமந்த வாகனத்திலும் நான்காம் நாள் சேஷவாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாக்களில் ஒன்றான பெரிய திருவடி எனும் கருட சேவை 29ம் தேதி காலையில் நடக்கிறது. 30ம் தேதி யானை வாகனத்தில் ஊர்வலம், 31ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர். விழா நடக்கும் நாட்களில் இரவு ஊஞ்சல் உற்சவமும், கோவில் அருகே தொடர் அன்னதானமும் செய்ய உள்ளனர்.