உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை கோவில் திருமதில் சுவர் புதுப்பிப்பு!

சிவன்மலை கோவில் திருமதில் சுவர் புதுப்பிப்பு!

காங்கயம் : சிவன்மலை கோவில் திருப்பணியின் போது, திருமதில் சுவரின் பழமை மீட்கப்பட்டு, மீன், யாழி உள்ளிட்ட புடை சிற்பங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் கடந்த 2000 செப்.,10ம் தேதி நடந்தது. 14 ஆண்டுகள் கழித்து, ஜூலை 4ம் தேதி மீண்டும் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, கடந்த இரண்டு ஆண்டாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக ராஜகோபுரம் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில் சிற்ப நுண்கலை வேலைப்பாடுகள் மிகுந்த நிலைக்கதவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 90 லட்சம் ரூபாய் செலவில் சுற்று பிரகார மண்டபம், 20 லட்சம் ரூபாய் செலவில் பாவு தளம், மண்டப தூண்கள், சுற்று பிரகார பகுதிகளில் சுதை, பூதங்கள் 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.மூலவர், பரிவார சன்னதிகள், கோவில் வளாகம் முழுவதும் 50 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசும் பணி என மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்துள்ளன. சுற்று பிரகார மண்டபங்கள், முன் மண்டபம் மற்றும் மலை சுவர்களில் அழகான ஓவியங்கள், சிவமலை குறவஞ்சி பாடல்கள் எழுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கோவில் திருமதில் சுவர் முழுவதும் பழமையை மறைத்து சுண்ணாம்பு காரை பூசப்பட்டு வந்துள்ளது.பல ஆண்டுகளாக திருமதில் சுவருக்கு வெள்ளை மட்டும் பூசப்பட்டு வந்த நிலையில், இப்போது திருமதில் சுவரின் பழமையை மீட்கப்பட்டுள்ளது. சுவற்றில் இருந்த காரைப்பூச்சு முற்றிலும் அகற்றப்பட்டு, அமோனியா கரைசல், நான் அயர்னிக் டிடர்ஜென்ட், சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்களால் கழுவப்பட்டு, பழமையான கற்கார சுவர் மீட்கப்பட்டது. மேலும், சிமெண்ட் மற்றும் மணல் மாவு போல் அரைக்கப்பட்டு, தண்ணீர் புகாத மற்றும் செடிகள் முளைக்காத ரசாயன கலவை கொண்டு, கற்கள் இணைப்புகளில் "கெமிக்கல் பாயின்டிங் செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமதில் சுவரில், யானை, யாழி, குரங்கு, மீன் உள்ளிட்ட பல அழகான புடை சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கோவிலின் பழமை மீட்கப்பட்டுள்ளதால், கற்கார மதில் சுவர் பக்தர்கள் கவர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !