உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி வலியுறுத்தல்

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி வலியுறுத்தல்

ஈரோடு: விவசாய பூமியாக மாற்றப்பட்ட, கோவிலுக்கு சொந்தமான பாதையை, ஊர் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்று கோரி, அந்தியூர் தாலுகா, வீரனூர் நகலூர் கிராம மக்கள், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: வீரனூரில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். ஊருக்கு தெற்கே, ஓம் காளியம்மன், முத்து முனியப்பன், மதுரை வீரன் கோவில்கள் உள்ளன. கடந்த, நான்கைந்து தலைமுறைகளாக விழா நடத்தி வருகிறோம். கோவிலுக்கு பூர்வீக வகையில், வண்டிபாதை இருந்தது. தற்போது, வண்டிபாதையை, தனி நபர் ஒருவர் ஆக்ரமித்து, தனது பட்டா நிலத்துடன் சேர்த்து கொண்டுள்ளார். மேலும், உழவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு ஆவணங்களில் வண்டிபாதை என்று தான் உள்ளது. கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்தோம். வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் சர்வேயரிடம் தெரிவித்து இருந்தோம். தேர்தல் முடிந்தவுடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், என்று உறுதி அளித்து இருந்தனர். ஓட்டு எண்ணிக்கை முடிந்து, எட்டு நாட்களான பின்னரும் கூட, எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. வண்டி பாதையை தனி நபர் ஆக்கிரமித்து இருப்பதால், சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் ஆண்டு திருவிழாவை கொண்டாட முடியவில்லை. கோவிலுக்கு சொந்தமான வண்டிபாதையை, மீண்டும் எங்கள் வசமே ஒப்படைக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள அரசு ஆவணங்களை பார்த்து, வண்டிபாதையை உறுதி செய்து, அதனை மீட்டு எங்களிடம் வழங்க வேண்டும், என, கேட்டுகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !