சிதிலமடைந்த கோவில்களில் பக்தர்கள் உதவியுடன் திருப்பணி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோவில்களில், பக்தர்கள் நிதி உதவியுடன் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவுக்குட்பட்ட வெள்ளூர் ஸ்ரீதர÷ஸ்வரர் கோவில், சுந்தரராஜ பெருமாள் கோவில், சிறுவரை வரதராஜ பெருமாள் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், மஞ்சக்குடி பெருமாள் கோவில் மற்றும் விஸ்வநாதசுவாமி கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவில்கள் போதிய பராமரிப்பின்றி, சிதிலமடைந்து வருகிறது. கோவில்களில், பக்தர்கள் நிதி உதவியுடன், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே, கோவில்களை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மனோகரன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அரசு மற்றும் பக்தர்கள். நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து நிதி உதவி பெற்று, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.