இருக்கன்குடி கோயில் முடி ஏலம் ஒத்திவைப்பு!
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலை முடி,கடந்த ஆண்டு 3 கோடி 60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், நேற்று முடி ஏலம் கேட்க ஆட்கள் வரவில்லை. இதனால் முடியை, கோயில் நிர்வாகமே பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை, பொது ஏலத்தில் விடப்படுவது வழக்கம். ஹைதராபாத் போன்ற பெருநகர கம்பெனிகள், பொது ஏலத்தில் 3 கோடி வரை கொடுத்து எடுத்து செல்வர். அதன்படி,நேற்று காலை 11 மணிக்கு, முடி, பிரசாதஸ்டால், விறகு, நவதானியம், தலைச்சுமை, விடலை தேங்காய் சேகரித்தல், பனைமரம் மேல் பலன், புளியமரம் மேல்பலன் உள்ளிட்ட இனங்கள், பொது ஏலத்தில் விடப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்துதியாகராஜன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, கோயில் செயல் அலுவலர் பெ.தனபாலன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. பிரசாதஸ்டால் ரூ. 24 லட்சத்து 16 ஆயிரத்து 101 , நவதானியம் ரூ.8லட்சத்து 70 ஆயிரம் , தலைச்சுமை, தரைகடைஇனங்கள் 8லட்சத்து 68ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. முடி ஏலம்,கடந்த ஆண்டு 3 கோடி 60 லட்சம் ரூபாய்க்கு போன நிலையில், நேற்று முடி ஏலம் கேட்க ஆட்கள் வரவில்லை. இதனால், முடி ஏலம், விடலை தேங்காய் சேகரித்தல், பனைமரம் மேல் பலன் அனுபவித்தல், புளியமரம் மேல் பலன் அனுபவித்தல் உள்ளிட்ட இனங்கள் ஒத்திவைக்கப்படுவதாக, அதிகாரிகள் அறிவித்தனர். முடி ஏலம் போகாததால், கோயிலில் சேகரமாகும் முடியை, கோயில் நிர்வாகமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.