உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிகார துணிகளால் சீர்கேடு: அவலத்தில் குச்சனூர் சனீஸ்வரர் கோயில்!

பரிகார துணிகளால் சீர்கேடு: அவலத்தில் குச்சனூர் சனீஸ்வரர் கோயில்!

சின்னமனூர் : குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் உள்ள சுரபிநதியில், பக்தர்கள் பரிகார துணிகளை போடுவதால், மாசுபடுவதுடன் தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குச்சனூர் சனீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். சுரபி என்ற சிறப்பு பெற்ற நதி, சந்நிதியின் எதிர் புறத்தில் செல்கிறது. இந்த புனித நதியில்தான், பக்தர்கள் கை கால்களை கழுவியும், நீராடிவிட்டும் கோயிலுக்குள் செல்ல வேண்டும். பரிகாரத்திற்காக வரும் பக்தர்கள், ஐதீககத்தின் காரணமாக, குளித்துவிட்டு தங்களது உடைகளையும், பரிகார துணிகளையும், பிற பொருள்களையும் அந்த நதியிலேயே விட்டுச் செல்கின்றனர். இந்த துணிகளை எடுத்துக் கொள்ளும் டெண்டர் எடுத்துள்ள நபர்கள், அதில் புதிய துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பழைய துணிகளை அப்படியை நதியில் விட்டுவிடுகின்றனர். இதனால், இந்த நதியில் துணிகள் தேங்கி, நதி சுகாதார சீர்கேட்டில் சிக்கிக் கொள்வதுடன், தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. கோயிலில் பழைய துணிகளை எடுத்துக் கொள்வதற்கான டெண்டர் தொகை, ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகமாகி வருவாயை கொடுக்கிறது. ஆனால் கோயில் நிர்வாகம், பழைய துணிகளை முறைப்படுத்தி, சுகாதாரத்தை பேண எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பக்தர்களின் பரிகார துணிகளை, கோயில் வளாகத்திலேயே போடும் வகையில் பெரிய தொட்டி அமைத்து, அதில் துணிகளை போட அறிவுறுத்தினால், பக்தர்கள் அதில் போட்டுச் செல்வர். அதுவும் செய்யப்படவில்லை. டெண்டர் எடுக்கும் நபர்களிடம், விதிமுறைப்படி நதியில் போடப்படும் அனைத்து துணிகளையும் எடுத்துச் செல்லவும் கண்டிப்பு காட்டுவதில்லை. இதனால், இந்த பரிகார துணிகளால் நதியும் கோயில் வளாகமும் சுகாதார சீர்கேடு அடைகிறது. இன்னும் இரு மாதங்களில் பெருந்திருவிழா துவங்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளில் தனி கவனம் கொண்டு செய்ய நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !