சிலம்பியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் விளையாட்டு விழா!
புதுச்சத்திரம்: வில்லியநல்லூர் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை யொட்டி, மஞ்சள்நீர் விளையாட்டு விழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூரில் பிரசித்திபெற்ற சிலம்பியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு உற்சவம் கடந்த 25ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 31 ம் தேதி இரவு சிறப்பு விழாவான முத்துப் பல்லக்கு நடந்தது. இறுதி நாளான நேற்று மஞ்சள்நீர் விளையாட்டு விழா நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து முத்து விமானத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் இப்பகுதி பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்ச்சியடைந்தனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.