உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரக்கணக்கான ஆடு பலியிட்டு வழிபாடு: விடிய விடிய பொங்கல் விழா!

ஆயிரக்கணக்கான ஆடு பலியிட்டு வழிபாடு: விடிய விடிய பொங்கல் விழா!

பெ.நா.பாளையம்: கோவை அருகே, 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் விழாவில், ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடந்தது. விடிய விடிய நடந்த பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். கோவை அருகே உள்ளது பூச்சியூர். இங்குள்ள வீரபத்திரசாமி, தொட்டம்மாள் கோவிலில், குரும்ப கவுடர் சமுதாயத்தினர் சார்பில், 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ’பெரியசுவாமி பொங்கல் விழா’ வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இவ்விழாவில், இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்பர். அப்போது, உடன் பிறந்த அக்கா, தங்கைகளை விருந்திற்கு அழைத்து புத்தாடைகள் வழங்கி ஆசீர்வாதம் செய்வர். மே, 28ல் இவ்விழா துவங்கிய நிலையில், கடந்த, 2ம் தேதி அதிகாலை, சுடப்படாத பச்சை மண் சட்டியில், வாழைத்தண்டை வைத்து, பசும்பாலை கடைந்து வெண்ணெய் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மலைவாழ் மக்கள் தீர்த்தம் வீசி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தங்களது பாரம்பரியமான இசைக்கருவிகளை வாசித்து, சுவாமி வீற்றிருக்கும் பந்தலை வந்தடைந்தனர். நேற்று, பொங்கல் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்தல் நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது. இதன் பின், வீடுகளில் விரதமிருந்து, சுவாமிக்காக வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடுகள் அழைத்து வரப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் பயபக்தியுடன் பலியிடப்பட்டன. பலர், கோவிலில் இருந்து தீர்த்தங்களை வீடுகளுக்கு கொண்டு சென்று, ஆடுகளை பலியிட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து துவங்கிய ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி, நேற்று காலை வரை நீடித்தது. இவ்விழாவில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, நூற்றுக்கணக்கான குரும்ப கவுடர் சமூகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !