பழநியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
பழநி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ சரண கோஷத்துடன், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ‘வைகாசி விசாகத் திருவிழா’ கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநிகோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில், ஆறு காலசங்கள் வைத்து, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டு, காலை 9.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாளான ஜூன் 10ல் மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், ஏழாம் நாள் ஜூன் 11ல் வைகாசி விசாகத்தன்று, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி தங்க மயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட, வாகனங்களில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்கின்றனர்.