உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரர், பெருமாள் கோவில் வைகாசி விசாகத் திருவிழா துவக்கம்

விஸ்வேஸ்வரர், பெருமாள் கோவில் வைகாசி விசாகத் திருவிழா துவக்கம்

திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, காவல் தெய்வமான செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, வீதி உலாவுடன் துவக்கப்பட்டது. திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று மாலை 6.00 மணிக்கு, காவல் தெய்வமான செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு, மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், நெய், இளநீர், எலுமிச்சை, சந்தனம், பன்னீர் ஆகிய 12 திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின், தேரோடும் வீதிகளில் செல்லாண்டியம்மன் வீதி உலா நடந்தது. நள்ளிரவு, கிராம தேவதைகளை மகிழ்ச்சிபடுத்தும், முனி சோறு இறைக்கும் கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை, விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது; மாலை 6.30 மணிக்கு, திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. நாளை, சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு; 7ம் தேதி, அதிகாரநந்தி, சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா; 8ம் தேதி, கற்பக விருட்ஷம்; 9ம் தேதி பஞ்ச மூர்த்தி புறப்பாடு, எம்பெருமாள் கருட சேவை புறப்பாடு; 10ம் தேதி, திருக்கல்யாணம் நடக்கிறது. விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் 11ம் தேதி மதியம் 2.00 மணிக்கும், வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், 12ம் தேதி மதியம் 2.00 மணிக்கும் நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 17ம் தேதி வரை, கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !