உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பராயப் பெருமாள் கோயில் சொத்து பரிவர்த்தனை "ஜரூர்!

கம்பராயப் பெருமாள் கோயில் சொத்து பரிவர்த்தனை "ஜரூர்!

கம்பம் : கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கடைகளை விற்பனை செய்து, பகடி வாங்கி மாற்றி விடுவது, என லட்சக்கணக்கில் பணம் கைமாறுகிறது. செயல் அலுவலர் எதையும் கண்டுகொள்ளாமல், "குறட்டை விடுகிறார். கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு, நகரின் மையப்பகுதியில் 10 ஏக்கரில் நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் சொந்தமாக உள்ளன. இந்த கடைகள் மற்றும் வீடுகளில் வாடகை அடிப்படையில் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். வாடகை பிரச்னையில் குடியிருப்போர் சங்கத்திற்கும், கோயில் நிர்வாகத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி கட்டடங்களை புதுப்பிக்கவோ, புதிதாக கட்டவோ கூடாது என்பது விதி. ஆனால், குடியிருப்பவர்கள் "சரிக்கட்டி தங்களின் வேலைகளை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இரண்டு கடைகளில் மட்டும் தங்களின் "வேகத்தை காட்டிய நிர்வாகம், மற்ற வீடுகள் மற்றும் கடைகள் விவகாரத்தில் படுத்துக் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் மெயின்ரோட்டில் உள்ள பல கடைகளுக்கு, கோயில் ஆவணங்களில் உள்ள பெயருக்கும், தற்போது கடை வைத்திருப்பவருக்கும் சம்பந்தமே இருக்காது. மேலும் இப்போதும் கடைகள் பகடி முறையில் விற்பனை செய்வதும், ஒத்தி, ஈடு, மறுவாடகைக்கு விடுவதும் அரங்கேறி வருகின்றன. அதிலும், ஒரு சிறிய கடை கூட ரூ.20 முதல் 40 லட்சம் வரை விலை போகிறது. தனியார் தங்களின் பரிவர்த்தனையை முடித்துக் கொண்டு, கடைகளை அனுபவித்து வருகின்றனர். கோயில் நிர்வாகம் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது. பரிவர்த்தனைகளின் போது, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திற்கும் "கவனிப்பு உண்டு என்கின்றனர், சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள். எனவே தான் கோயில் நிர்வாகம் அமைதி காப்பதாகவும், கூறுகின்றனர். கொள்ளை போகும் கோயில் சொத்துக்களை மீட்க திண்டுக்கல்லில் உள்ள உதவி ஆணையர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத்திடம் கேட்ட போது, " நான் பொறுப்பேற்ற பின் இணை ஆணையர் கோர்ட்டில் 72 வழக்குகள் தாக்கல் செய்துள்ளேன். உத்தமபாளையம் முன்சீப் கோர்ட்டில் 12 வழக்குகள் போடப்பட்டுள்ளது. பகடி முறையில் மாற்றப்படுவது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், நடவடிக்கை எடுப்பபேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !