மழை பெய்ய வேண்டி கிடாவெட்டி வழிபாடு
கோபிசெட்டிபாளையம்: கோபியில், மழை பெய்ய வேண்டி, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன சபை விவசாயிகள், பொங்கல் வைத்து, கிடாவெட்டி வழிப்பட்டனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி அணை மூலம், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு, இரு போகம் திறக்கப்படும் தண்ணீரால், நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம் போன்ற பயிர்கள், அதிகமாக சாகுபடி செய்கின்றனர். தமிழகம் முழுவதும், கடும் வறட்சி நிலவியதால், கடந்த, இரு ஆண்டாக, ஒரு போகத்துக்கு மட்டும், பொதுப்பணித்துறையால், தண்ணீர் திறக்கப்பட்டது. தவிர, மூன்று முறை, தலா, 15 நாட்கள் என்ற நிலையில், பயிர்களை காக்க உயிர் நீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், கடந்த ஓரிரு வாரங்களாக, மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்தாகி உள்ளது. முதல் போக நெ ல் சாகுபடிக்கு, தண்ணீர் திறக்க, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டு தோறும், மழை வேண்டி, இப்பாசன விவசாயிகள், கொடிவேரி அணையில் உள்ள முனியப்பசுவாமிக்கு, பொங்கல் வைத்து, கிடாவெட்டி, பிரார்தனை செய்வர். அதன்படி, நடப்பாண்டில், முதல் போகத்துக்கு, தண்ணீர் திறக்கக்கோரியும், மழை பெய்ய வேண்டியும், இரண்டு கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அப்போது, அரக்கன்கோட்டை பாசனம், கோட்டம் நான்கின் தலைவர் ராமசாமி கூறியதாவது: கொடிவேரி அணையில் இருந்து பிரியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் நிலம், ஒவ்வொரு ஆண்டும் நன்கு விளைச்சல் கண்டது. இந்தாண்டு, இரண்டு போகத்துக்கு, மழை வேண்டி, கிடா வெட்டி, யாகம் வளர்த்து பிரார்தனை செய்தோம்.