உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி நேர்த்திக்கடன்

மாகாளியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி நேர்த்திக்கடன்

வெள்ளகோவில்: வெள்ளகோவில், மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு குண்டம் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமானோர், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். கடந்த மே, 27ம் தேதி, கம்பம், கும்பம் தெப்பக்குளத்தில் இருந்து, கோவிலுக்கு வந்தடைந்தது. கடந்த, மூன்றாம் தேதி இரவு, வடிசாதம் படைத்தல், இரவு திருக்காவடி கொடுமுடி புறப்படுதல், நான்காம் தேதி காலை பொங்கலிடுதல், காலை, பத்து மணியளவில், காவடி தீர்த்தம் செலுத்துதல், பகல், 12 மணியளவில் பொங்கல் படைத்தல், மாலை, நான்கு மணிக்கு மாவிளக்கு புறப்படுதல், மாலை, ஆறு மணிக்கு படைத்தலும், சிறப்பு அபிஷேக பூஜையும் நடந்தது. பூச்சாட்டுதலில் இருந்து கம்பத்துக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீர் ஊற்றினர். காலை, மாலை என இரு வேளையும், மாகாளியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை, ஆறு மணிக்கு வீரக்குமாரசுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, அக்னிசட்டி புறப்பட்டு, சேற்று வேஷமிட்டவர்கள், முன்புறமாக ஆடிக்கொண்டே செல்ல, பின்னால், அலகு குத்தியவர்கள், மேளதாளத்துடன் வந்தனர். கடைவீதி, முக்கிய வீதிவழியாக, மாகாளியம்மன் கோவிலை அடைந்தது. மாலை, ஐந்து மணியளவில், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 50க்கும் மேற்பட்டோர், அக்னிசட்டி எடுத்தனர். அலகு குத்தியவர்கள், மூவரும், முத்துப்பல்லாக்கு, விமான பல்லாக்கு என்ற அலகுகளை குத்தி, மாகாளிம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். அலகு குத்தியவர்களுக்கு, பார்ப்பவர்கள் மற்றும் உறவினர்கள், பணத்தாள்களை குத்தி விட்டனர். இரவு கும்பம், கம்பம் கங்கை சென்றடைதல், இன்று காலை, பத்து மணிக்கு மறுஅபிஷேகம் நடக்கிறது. அம்மன் திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல், சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !