அண்ணாமலையார் கோவிலில் தெப்பம் செய்யும் பணி தீவிரம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும், இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதில், முக்கிய விழாவான, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இந்த விழா முடிந்து தொடர்ந்து மூன்று நாட்கள் அய்யங்குளத்தில், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன், சுப்பிரமணியர், பராசக்தி அம்மன், என இந்த ஸ்வாமிகளின் தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். இதனை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த தெப்பல் உற்சவத்தின்போது ஸ்வாமி, மற்றும் அம்மனை தெப்பலில் வைத்து அலங்கரித்து, குளத்தை மூன்று முறை சுற்றி வர செய்வர். இதற்காக பயன்படுத்தப்படும், ஏற்கனவே செய்யப்பட்ட, தெப்பம் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், செய்யப்பட்டது. இவை தற்போது பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை. இதனால், புதிய தெப்பம் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டது. இதில், சிவகங்கை மாவட்டம் மாலைக்கண்டான் பகுதியை சேர்ந்த செல்வம் ஸ்பதியை தேர்வு செய்து, 35 லட்சத்து, 30 ஆயிரத்து, 790 ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில், இந்த தெப்பல் முழுவதும், தேக்கு மரத்தால் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இதில், தற்போது தெப்பலில் பயன்படுத்தப்பட உள்ள பொம்மை மற்றும் சப்பரங்கள் செய்யும் பணி நடந்து வருகிறது. இவை, இன்னும் ஓரிரு மாதங்களில் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. வரும் கார்த்திகை தீப திருவிழாவின்போது, இந்த புதிய தெப்ப உற்சவம் நடைபெறுவதற்கான, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.